Saturday, August 1, 2020

32. பிரார்த்தனைப்பத்து

32. பிரார்த்தனைப்பத்து

திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயில்) அருளிச்செய்யப்பட்டது.

சதா முத்தி; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.


திருச்சிற்றம்பலம்


கலந்து நின்னடி யாரோ டன்று வாளா களித்திருந்தேன் புலர்ந்து போன காலங்கள் புகுந்து நின்ற திடர்பின்னாள் உலர்ந்து போனேன் உடையானே உலவா இன்பச் சுடர்காண்பான் அலர்ந்து போனேன் அருள்செய்யாய் ஆர்வங் கூர அடியேற்கே.  1
அடியார் சிலருன் அருள்பெற்றார் ஆர்வங் கூர யான் அவமே
முடையார் பிணத்தின் முடிவின்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன்
கடியேனுடைய கடுவினையைக் களைந்துன் கருணைக் கடல்பொங்க
உடையாய் அடியேன் உள்ளத்தே ஓவா துருக அருளாயே.  2 
அருளா ரமுதப் பெருங்கடல்வாய் அடியா ரெல்லாம் புக்கழுந்த
இருளா ராக்கை யிதுபொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே
மருளார் மனத்தோர் உன்மத்தன் வருமால் என்றிங் கெனைக்கண்டார்
வெருளா வண்ணம் மெய்யன்பை உடையாய் பெறநான் வேண்டுமே.  3 
வேண்டும் வேண்டும் மெய்யடியா ருள்ளே விரும்பி எனை அருளால் 
ஆண்டாய் அடியேன் இடர்களைந்த அமுதே அருமா மணிமுத்தே
தூண்டா விளக்கின் சுடரனையாய் தொண்டனேற்கும் உண்டாங்கொல்
வேண்டா தொன்றும் வேண்டாதுமிக்க அன்பே மேவுதலே.  4 
மேவும் உன்றன் அடியாருள் விரும்பி யானும் மெய்ம்மையே
காவி சேருங் கயற்கண்ணாள் பங்கா உன்றன் கருணையினால்
பாவியேற்கும் உண்டாமோ பரமா னந்தப்  பழங்கடல்சேர்ந்
தாவி யாக்கை யானென்தன் றியாது மின்றி அறுதலே.  5 
அறவே பெற்றார் நின்னன்பர் அந்தமின்றி அகநெகவும்
புறமே கிடந்து புலைநாயேன் புலம்பு கின்றேன் உடையானே
பெறவே வேண்டும் மெய்யன்பு பேரா ஒழியாப் பிரிவில்லா
மறவா நினையா அளவிலா மாளா இன்ப மாகடலே.  6 
கடலே அனைய ஆனந்தம் கண்டா ரெல்லாங் கவர்ந்துண்ண
இடரே பெருக்கி ஏசற்றிங் கிருத்த லழகோ அடிநாயேன்
உடையாய் நீயே அருளிதியென் றுணர்த்தா தொழிந்தே கழிந்தொழிந்தேன்
சுடரார் அருளால் இருள்நீங்கச் சோதி இனித்தான் துணியாயே.  7 
துணியா உருகா அருள்பெருகத் தோன்றும் தொண்டரிடைப்புகுந்து
திணியார் மூங்கிற் சிந்தையேன் சி வனே நின்று தேய்கின்றேன்
அணியா ரடியா ருனக்குள்ள அன்புந் தாராய் அருளளியத்
தணியா தொல்லை வந்தருளித் தளிர்ப்பொற் பாதந் தாராயே.  8 
தாரா அருளொன் றின்றியே தந்தாய் என்றுன் தமரெல்லாம்
ஆரா நின்றார் அடியேனும் அயலார் போல அயர்வேனோ
சீரார் அருளாற் சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா
பேரா னந்தம் பேராமை வைக்க வேண்டும் பெருமானே.  9 
மானோர் பங்கா வந்திப்பார் மதுரக்  கனியே மனநெகா
நானோர் தோளாச் சுரையொத்தால் நம்பி இத்தால் வாழ்ந்தாயே
ஊனே புகுந்த உனையுணர்ந்தே உருகிப் பெருகும் உள்ளத்தைக்
கோனே அருளுங் காலந்தான் கொடியேற் கென்றோ கூடுவதே.  10 
கூடிக்கூடி உன்னடியார் குனிப்பார் சிரிப்பார் களிப்பாரா
வாடி வாடி வழியற்றேன் வற்றல் மரம்போல் நிற்பேனோ
ஊடி ஊடி உடையாயொடு கலந்துள் ளுருகிப் பெருகிநெக்கு
ஆடிஆடி ஆனந்தம் அதுவே யாக அருள்கலந்தே.  11 
  

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

51. அச்சோப் பதிகம்

  51. அச்சோப் பதிகம் கோயில் (சிதம்பரம், தில்லையில் அருளிச்செய்யப்பட்டது)  அனுபவவழி அறியாமை; கலிவிருத்தம். திருச்சிற்றம்பலம் முத்திநெறி அறியா...