35. அச்சப்பத்து
கோயில் (சிதம்பரம், தில்லையில்
அருளிச்செய்யப்பட்டது)
ஆனந்தமுறுதல்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
திருச்சிற்றம்பலம்
புற்றில்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு
அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 1
வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம்
திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 2
வன்புலால் வேலும் அஞ்சேன் வ ளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடு கின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 3
கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு
அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 4
பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியினான்தன் தொழும்பரோ டழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 5
வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன்
தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்பதம் கடந்த அப்பன்
தாளதா மரைகளேத்தித் தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 6
தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாத மேத்தி
அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 7
தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்க மாட்டா
அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 8
மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பி ரானாய்ச்
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது
அஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 9
கோணிலா வாளி அஞ்சேன் கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியினானை நினைந்துநைந் துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர வாழ்த்திநின் றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 10
No comments:
Post a Comment