Tuesday, July 21, 2020

19. திருத்தசாங்கம்

19. திருத்தசாங்கம்


கோயில் (சிதம்பரம், தில்லையில் அருளிச்செய்யப்பட்டது)

 அடிமை கொண்ட முறைமை; நேரிசை வெண்பா.

திருச்சிற்றம்பலம்


ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன் சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் - ஆரூரன் செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல் எம்பெருமான் தேவர்பிரான் என்று.  1
ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும்
நாதன் நமை ஆளுடையான் நாடுரையாய் - காதலவர்க்கு
அன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றும்
தென்பாண்டி நாடே தெளி.  2 
தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும்
மாதாடும் பாகத்தான் வாழ்பதியென் - கோதாட்டிப்
பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும்
உத்தர கோசமங்கை யூர்.  3 
செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீநஞ் சிந்தைசேர்
ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் - தையலாய்
வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும்
ஆனந்தங் காணுடையான் ஆறு.  4 
கிஞ்சுகவாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன்
மஞ்சன் மருவும் மலைபகராய் - நெஞ்சத்து
இருளகல வாள்வீசி இன்பமரும் முத்தி
அருளுமலை என்பதுகாண் ஆய்ந்து.  5 
இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே
ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே - எப்போதும்
தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப
வான்புரவி யூரும் மகிழ்ந்து.  6 
கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில் பெருந்துறைக்கோன் 
மாற்றாரை வெல்லும் படைபகராய் - ஏற்றார்
அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங்
கழுக்கடைகாண் கைக்கொள் படை.  7 
இன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன் 
முன்பால் முழங்கும் முரசியம்பாய் - அன்பாற்
பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும்
பருமிக்க நாதப் பறை.  8 
ஆய மொழிக்கிள்ளாய் அள்ளூறும் அன்பர்பால்
மேய பெருந்துறையான் மெய்த்தாரென் - தீயவினை
நாளுமணு காவண்ணம் நாயேனை ஆளுடையான்
தாளிஅறு காம் உவந்த தார்.  9 
சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன்
கோலம் பொலியுங் கொடிகூறாய் - சாலவும்
ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டும்
கோதிலா ஏறாம் கொடி.  10 
  

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

51. அச்சோப் பதிகம்

  51. அச்சோப் பதிகம் கோயில் (சிதம்பரம், தில்லையில் அருளிச்செய்யப்பட்டது)  அனுபவவழி அறியாமை; கலிவிருத்தம். திருச்சிற்றம்பலம் முத்திநெறி அறியா...