5. திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது)
திருச்சிற்றம்பலம்
10. ஆனந்தாதீதம்
எண்சீர்ஆசிரியவிருத்தம்
மாறி லாதமாக் கருணை வெள்ளமே வந்து முந்திநின் மலர்கொள் தாளிணை வேறி லாப்பதப் பரிசு பெற்றநின் மெய்ம்மை அன்பர்உன் மெய்ம்மை மேவினார் ஈறி லாதநீ எளியை யாகிவந் தொளிசெய் மானுட மாக நோக்கியுங் கீறி லாதநெஞ் சுடைய நாயினேன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே. 1
மையி லங்குநற் கண்ணி பங்கனே வந்தெ னைப்பணி கொண்ட பின்மழக் கையி லங்குபொற் கிண்ணம் என்றலால் அரியை யென்றுனைக் கருது கின்றிலேன் மெய்யி லங்குவெண் ணீற்று மேனியாய் மெய்ம்மை அன்பர்உன் மெய்ம்மை மேவினார் பொய்யி லங்கெனைப் புகுத விட்டுநீ போவ தோசொலாய் பொருத்த மாவதே. 2
பொருத்த மின்மையேன் பொய்ம்மை யுண்மையேன் போத என்றெனைப் புரிந்து நோக்கவும் வருத்த மின்மையேன் வஞ்ச முண்மையேன் மாண்டி லேன்மலர்க் கமல பாதனே அரத்த மேனியாய் அருள்செய் அன்பரும் நீயும் அங்கெழுந் தருளி இங்கெனை இருத்தி னாய்முறை யோஎ னெம்பிரான் வம்ப னேன்வினைக் கிறுதி யில்லையே. 3
இல்லை நின்கழற் கன்ப தென்கணே ஏலம் ஏலுநற் குழலி பங்கனே கல்லை மென்கனி யாக்கும் விச்சைகொண் டென்னை நின்கழற் கன்ப னாக்கினாய் எல்லை யில்லைநின் கருணை யெம்பிரான் ஏது கொண்டுநான் ஏது செய்யினும் வல்லை யேயெனக் கின்னும் உன்கழல் காட்டி மீட்கவும் மறுவில் வானனே. 4
வான நாடரும் அறியொ ணாதநீ மறையி லீறுமுன் தொடரொ ணாதநீ ஏனை நாடருந் தெரியொ ணாதநீ என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா ஊனை நாடகம் ஆடு வித்தவா உருகி நான்உனைப் பருக வைத்தவா ஞான நாடகம் ஆடு வித்தவா நைய வையகத் துடைய விச்சையே. 5
விச்ச தின்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய் வஞ்ச கப்பெரும் புலைய னேனைஉன் கோயில் வாயிலிற் பிச்ச னாக்கினாய் பெரிய அன்பருக் குரிய னாக்கினாய் தாம்வ ளர்த்ததோர் நச்சு மாமர மாயி னுங்கொலார் நானும் அங்ஙனே உடைய நாதனே. 6
உடைய நாதனே போற்றி நின்னலால் பற்று மற்றெனக் காவ தொன்றினி உடைய னோபணி போற்றி உம்பரார் தம்ப ராபரா போற்றி யாரினுங் கடைய னாயினேன் போற்றி என்பெருங் கருணை யாளனே போற்றி என்னைநின் அடிய னாக்கினாய் போற்றி ஆதியும் அந்த மாயினாய் போற்றி அப்பனே. 7
அப்ப னேயெனக் கமுத னேஆ னந்த னேஅகம் நெகஅள் ளூறுதேன் ஒப்ப னேஉனக் குரிய அன்பரில் உரிய னாய்உனைப் பருக நின்றதோர் துப்ப னேசுடர் முடிய னேதுணை யாள னேதொழும் பாள ரெய்ப்பினில் வைப்ப னேஎனை வைப்ப தோசொலாய் நைய வையகத் தெங்கள் மன்னனே. 8
மன்ன எம்பிரான் வருக என்னெனை மாலும் நான்முகத் தொருவன் யாரினும் முன்ன எம்பிரான் வருக என்னெனை முழுதும் யாவையும் இறுதி யுற்றநாள் பின்ன எம்பிரான் வருக என்னெனைப் பெய்க ழற்கண்அன் பாயென் நாவினாற் பன்ன எம்பிரான் வருக என்னெனைப் பாவ நாசநின் சீர்கள் பாடவே. 9
பாட வேண்டும்நான் போற்றி நின்னையே பாடி நைந்துநைந் துருகி நெக்குநெக் காட வேண்டும்நான் போற்றி அம்பலத் தாடு நின்கழற் போது நாயினேன் கூட வேண்டும்நான் போற்றி இப்புழுக் கூடு நீக்கெனைப் போற்றி பொய்யெலாம் வீட வேண்டும்நான் போற்றி வீடுதந் தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே. 10
No comments:
Post a Comment