2. கீர்த்தித்திருவகவல்
(தில்லையில் அருளிச் செய்யப்பட்டது)
சிவனது திருவருட்புகழ்ச்சி முறைமை
நிலைமண்டில ஆசிரியப்பா
திருச்சிற்றம்பலம்
தில்லை மூதூ ராடிய திருவடி
பல்லுயி ரெல்லாம் பயின்ற னாகி
எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோ ருலகும்
5. துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்
என்னுடை யிருளை ஏறத் துரந்தும்
அடியா ருள்ளத் தன்புமீ தூரக்
குடியாக் கொண்ட கொள்கையுஞ் சிறப்பும்
மன்னு மாமலை மகேந்திர மதனிற்
10. சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்
கல்லா டத்துக் கலந்தினி தருளி
நல்லா ளோடு நயப்புற வெய்தியும்
பஞ்சப் பள்ளியிற் பான்மொழி தன்னொடும்
எஞ்சா தீண்டு மின்னருள் விளைத்தும்
15. கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்
விராவு கொங்கை நற்றடம் படிந்தும்
கேவேட ராகிக் கெளிறது படுத்து
மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மகேந்திரத் திருந்து
20. உற்றவைம் முகங்க ளாற்பணித் தருளியும்
நந்தம் பாடியில் நான்மறை யோனாய்
அந்தமி லாரிய னாயமர்ந் தருளியும்
வேறுவே றுருவும் வேறுவே றியற்கையும்
நூறுநூ றாயிரம் இயல்பின தாகி
25. ஏறுடை ஈசனிப் புவனியை உய்யக்
கூறுடை மங்கையும் தானும்வந் தருளி
குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசைச்
சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்
வேலம் புத்தூர் விட்டே றருளிக்
30. கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்
தர்ப்பண மதனிற் சாந்தம் புத்தூர்
விற்பொரு வேடற் கீந்த விளைவும்
மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி
சொக்க தாகக் காட்டிய தொன்மையும்
35. அரியொடு பிரமற் களவறி யொண்ணான்
நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்
ஆண்டுகொண் டருள அழகுறு திருவடி
பாண்டி யன்றனக் குப்பரி மாவிற்
றீண்டு கனகம் இசையப் பெறாஅ
40. தாண்டா னெங்கோன் அருள்வழி யிருப்பத்
தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்
அந்தண னாகி யாண்டுகொண் டருளி
இந்திர ஞாலங் காட்டிய இயல்பும்
மதுரைப் பெருநன் மாநக ரிருந்து
45. குதிரைச் சேவக னாகிய கொள்கையும்
ஆங்கது தன்னி லடியவட் காகப்
பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும்
உத்தர கோச மங்கையு ளிருந்து
வித்தக வேடங் காட்டிய இயல்பும்
50. பூவண மதனிற் பொலிந்திருந் தருளித்
தூவண மேனி காட்டிய தொன்மையும்
வாத வூரினில் வந்தினி தருளிப்
பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்
திருவார் பெருந்துறைச் செல்வ னாகிக்
55. கருவார் சோதியில் கரந்த கள்ளமும்
பூவல மதனிற் பொலிந்தினி தருளிப்
பாவ நாச மாக்கிய பரிசும்
தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து
நன்னீர்ச் சேவக னாகிய நன்மையும்
60. விருந்தின னாகி வெண்கா டதனிற்
குருந்தின் கீழன் றிருந்த கொள்கையும்
பட்ட மங்கையிற் பாங்கா யிருந்தங்
கட்டமா சித்தி யருளிய அதுவும்
வேடுவ னாகி வேண்டுருக் கொண்டு
65. காடது தன்னிற் கரந்த கள்ளமும்
மெய்க்காட் டிட்டு வேண்டுருக் கொண்டு
தக்கான் ஒருவ னாகிய தன்மையும்
ஓரி யூரின் உகந்தினி தருளிப்
பாரிரும் பாலக னாகிய பரிசும்
70. பாண்டூர் தன்னில் ஈண்ட விருந்தும்
தேவூர்த் தென்பாற் றிகழ்தரு தீவிற்
கோவார் கோலங் கொண்ட கொள்கையும்
தேனமர் சோலைத் திருவா ரூரில்
ஞானந் தன்னை நல்கிய நன்மையும்
75. இடைமரு ததனில் ஈண்ட விருந்து
படிமப் பாதம் வைத்தவப் பரிசும்
ஏகம் பத்தின் இயல்பா யிருந்து
பாகம் பெண்ணோ டாயின பரிசும்
திருவாஞ் சியத்தில் சீர்பெற இருந்து
80. மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்
சேவக னாகித் திண்சிலை ஏந்திப்
பாவகம் பலபல காட்டிய பரிசும்
கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்
ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும்
85. ஐயா றதனில் சைவ னாகியும்
துருத்தி தன்னி லருத்தியோ டிருந்தும்
திருப்பனை யூரில் விருப்ப னாகியும்
கழுமல மதனிற் காட்சி கொடுத்தும்
கழுக்குன் றதனில் வழுக்கா திருந்தும்
90. புறம்பய மதனில் அறம்பல அருளியும்
குற்றா லத்துக் குறியா யிருந்தும்
அந்தமில் பெருமை யழலுருக் கரந்து
சுந்தர வேடத் தொருமுத லுருவுகொண்
டிந்திர ஞாலம போலவந் தருளி
95. எவ்வெவர் தன்மையுந் தன்வயிற் படுத்துத்
தானே யாகிய தயாபரன் எம்மிறை
சந்திர தீபத்துச் சாத்திர னாகி
அந்தரத் திழிந்துவந் தழகமர் பாலையுட்
சுந்தரத் தன்மையொடு துதைந்திருந் தருளியும்
100. மந்திர மாமலை மகேந்திர வெற்பன்
அந்தமில் பெருமை அருளுடை அண்ணல்
எந்தமை யாண்ட பரிசது பகரின்
ஆற்ற லதுவுடை யழகமர் திருவுரு
நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்
105. ஊனந் தன்னை ஒருங்குட னறுக்கும்
ஆனந் தம்மே ஆறா அருளியும்
மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன்
நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்
அழுக்கடை யாம லாண்டுகொண் டருள்பவன்
110. கழுக்கடை தன்னைக் கைக்கொண் டருளியும்
மூல மாகிய மும்மல மறுக்கும்
தூய மேனிச் சுடர்விடு சோதி
காதல னாகிக் கழுநீர் மாலை
ஏலுடைத் தாக எழில்பெற அணிந்தும்
115. அரியொடு பிரமற் களவறி யாதவன்
பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமும்
மீண்டு வாரா வழிஅருள் புரிபவன்
பாண்டி நாடே பழம்பதி யாகவும்
பத்திசெய் யடியரைப் பரம்பரத் துய்ப்பவன்
120. உத்தர கோச மங்கையூ ராகவும்
ஆதி மூர்த்திகட் கருள்புரிந் தருளிய
தேவ தேவன் திருப்பெய ராகவும்
இருள்கடிந் தருளிய இன்ப வூர்தி
அருளிய பெருமை யருண்மலை யாகவும்
125. எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும்
அப்பரி சதனால் ஆண்டுகொண் டருளி
நாயி னேனை நலமலி தில்லையுள்
கோல மார்தரு பொதுவினில் வருகென
ஏல வென்னை ஈங்கொழித் தருளி
130. அன்றுடன் சென்ற அருள்பெறும் அடியவர்
ஒன்ற வொன்ற வுடன்கலந் தருளியும்
எய்தவந் திலாதார் எரியிற் பாயவும்
மாலது வாகி மயக்கம் எய்தியும்
பூதல மதனில் புரண்டுவீழ்ந் தலறியும்
135. கால்விசைத் தோடிக் கடல்புக மண்டி
நாத நாத என்றழு தரற்றிப்
பாதம் எய்தினர் பாதம் எய்தவும்
பதஞ்சலிக் கருளிய பரமநா டகவென்
றிதஞ்சலிப் பெய்தநின் றேங்கினர் ஏங்கவும்
140. எழில்பெறும் இமயத் தியல்புடை அப்பொற்
பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடநவில்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்
கருளிய திருக்கூத் தழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
145. பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன்
ஒலிதரு கைலை யுயர்கிழ வோனே.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment