25. ஆசைப்பத்து
திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயில்) அருளிச்செய்யப்பட்டது.
ஆத்தும இலக்கணம்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
திருச்சிற்றம்பலம்
கருடக்கொடியோன் காணமாட்டாக் கழற்சே வடியென்னும்
பொருளைத் தந்திங் கென்னை யாண்ட பொல்லா மணியேயோ
இருளைத் துரந்திட் டிங்கே வாவென்றங்கே கூவும்
அருளைப் பெறுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 1
மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்பு தோல் போர்த்த
குப்பாயம்புக் கிருக்க கில்லேன் கூவிக்கொள்ளாய் கோவேயோ
எப்பா லவர்க்கும் அப்பாலாம்என் ஆரமு தேயோ
அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 2
சீவார்ந் தீமொய்த் தழுக்கொடு திரியுஞ் சிறுகுடில் இது சிதையக்
கூவாய் கோவே கூத்தா காத்தாட் கொள்ளுங் குருமணியே
தேவா தேவர்க் கரியானே சிவனே சிறிதென் முகநோக்கி
ஆவா வென்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 3
மிடைந்தெலும் பூத்தை மிக்கழுக் கூறல் வீறிலி நடைக்கூடம்
தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன் சோத்தம் எம்பெருமானே
உடைந்துநைந் துருகி உன்னொளி நோக்கி உன்திரு மலர்ப்பாதம்
அடைந்து நின்றிடுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 4
அளிபுண்ணகத்துப் புறந்தோல் மூடி அடியேனுடையாக்கை
புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும்விடையாய் பொடியாடீ
எளிவந்தென்னை ஆண்டுகொண்ட என்னாரமுதேயோ
அளியேன் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 5
எய்த்தேன் நாயேன் இனியிங் கிருக்க கில்லேன் இவ்வாழ்க்கை
வைத்தாய் வாங்காய் வானோர் அறியா மலர்ச்சே வடியானே
முத்தா உன்றன் முகவொளி நோக்கி முறுவல் நகைகாண
அத்தா சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 6
பாரோர் விண்ணோர் பரவியேத்தும் பரனே பரஞ்சோதி
வாராய் வாரா வுலகந்தந்து வந்தாட்கொள்வானே
பேராயிரமும் பரவித் திரிந்தெம் பெருமான் என ஏத்த
ஆரா அமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 7
கையால் தொழுதுன் கழற்சே வடிகள் கழுமத் தழுவிக்கொண்டு
எய்யா தென்றன்தலைமேல் வைத்தெம் பெருமான் பெருமானென்று
ஐயா என்றன் வாயா லரற்றி அழல்சேர் மெழுகொப்ப
ஐயாற் றரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 8
செடியா ராக்கைத் திறமற வீசிச் சிவபுரநகர்புக்குக்
கடியார் சோதி கண்டுகொண்டென் கண்ணினை களிகூரப்
படிதா னில்லாப் பரம்பரனே உன்பழஅடியார் கூட்டம்
அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 9
வெஞ்சேலனைய கண்ணார்தம் வெகுளிவலையில் அகப்பட்டு
நைஞ்சேன் நாயேன் ஞானச் சுடரே நானோர் துணைகாணேன்
பஞ்சேரடியாள் பாகத்தொருவா பவளத் திருவாயால்
அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 10
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment