(திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது)
1. மெய்யுணர்தல்
கட்டளைக் கலித்துறை
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னுங்
கைதான் நெகிழ விடேனுடை யாயென்னைக் கண்டுகொள்ளே. 1
கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேறன் நினதடி யாரொடல் லால்நர கம்புகினும்
எள்ளேன் திருவரு ளாலே யிருக்கப் பெறின்இறைவா
உள்ளேன் பிறதெய்வம் உன்னையல் லாதெங்கள் உத்தமனே. 2
உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்துருகி
மத்த மனத்தொடு மால்இவன் என்ன மனநினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்துஎவரும்
தத்தம் மனத்தன பேசஎஞ் ஞான்றுகொல் சாவதுவே. 3
சாவமுன் னாள்தக்கன் வேள்வித் தகர்தின்று நஞ்சம்அஞ்சி
ஆவஎந் தாயென் றவிதா இடுநம் மவரவரே
மூவரென் றேயெம் பிரானொடும் எண்ணிவிண் ணாண்டுமண்மேல்
தேவரென் றேஇறு மாந்தென்ன பாவந் திரிதவரே. 4
தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட் டாதிறைஞ்சேன்
அவமே பிறந்த அருவினை யேன்உனக் கன்பருள்ளாஞ்
சிவமே பெறுந்திரு எய்திற் றிலேன்நின் திருவடிக்காம்
பவமே அருளுகண் டாய்அடி யேற்கெம் பரம்பரனே. 5
பரந்துபல் லாய்மலர் இட்டுமுட் டாதடி யேயிறைஞ்சி
இரந்தவெல் லாமெமக் கேபெற லாம்என்னும் அன்பருள்ளம்
கரந்துநில் லாக்கள்வ னேநின்றன் வார்கழற் கன்பெனக்கு
நிரந்தர மாவரு ளாய்நின்னை யேத்த முழுவதுமே. 6
முழுவதும் கண்டவ னைப்படைத் தான்முடி சாய்த்துமுன்னாள்
செழுமலர் கொண்டெங்கும் தேடஅப் பாலன்இப் பால்எம்பிரான்
கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதியிலியாய்
உழுவையின் தோலுடுத் துன்மத்த மேல்கொண் டுழிதருமே. 7
உழிதரு காலும் கனலும் புனலொடு மண்ணும்விண்ணும்
இழிதரு காலம்எக் காலம் வருவது வந்தற்பின்
உழிதரு காலத்த உன்னடி யேன்செய்த வல்வினையைக்
கழிதரு காலமு மாயவை காத்தெம்மைக் காப்பவனே. 8
பவன்எம் பிரான்பனி மாமதிக் கண்ணிவிண் ணோர்பெருமான்
சிவன்எம் பிரான்என்னை ஆண்டுகொண்டான்என் சிறுமைகண்டும்
அவன்எம் பிரான்என்ன நானடி யேன்என்ன இப்பரிசே
புவன்எம் பிரான்தெரி யும்பரிசாவ தியம்புகவே. 9
புகவே தகேன்உனக் கன்பருள் யானென்பொல் லாமணியே
தகவே யெனையுனக் காட்கொண்ட தன்மையெப் புன்மையரை
மிகவே உயர்த்திவிண் ணோரைப் பணித்திஅண் ணாஅமுதே
நகவே தகும்எம் பிரான்என்னை நீசெய்த நாடகமே. 10
No comments:
Post a Comment