5. திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது)
திருச்சிற்றம்பலம்
9. ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை
விச்சுக் கேடு பொய்க் காகா தென்றிங் கெனைவைத்தாய் இச்சைக் கானா ரெல்லாரும் வந்துன் தாள்சேர்ந்தார் அச்சத் தாலே ஆழ்ந்திடு கின்றேன் ஆரூர்எம் பிச்சைத் தேவா என்னான் செய்கேன் பேசாயே. 1
பேசப் பட்டேன் நின்னடி யாரில் திருநீறே பூசப் பட்டேன் பூதல ரால்உன் அடியானென் றேசப் பட்டேன் இனிப்படு கின்ற தமையாதால் ஆசைப் பட்டேன் ஆட்பட் டேன்உன் அடியேனே. 2
அடியேன் அல்லேன்கொல்லோ தானெனை ஆட்கொண்டிலை கொல்லோ அடியா ரானா ரெல்லாரும் வந்துன் தாள்சேர்ந்தார் செடிசேர் உடலம் இதுநீக்க மாட்டேன் எங்கள் சிவலோகா கடியேன் உன்னைக் கண்ணாரக் காணுமாறு காணேனே. 3
காணு மாறு காணேன் உன்னை அந்நாட் கண்டேனும் பாணே பேசி என்தன்னைப் படுத்த தென்ன பரஞ்சோதி ஆணே பெண்ணே ஆரமுதே அத்தாசெத்தே போயினேன் ஏணா ணில்லா நாயினேன் என்கொண் டெழுகேன் எம்மானே. 4
மானேர் நோக்கி யுமையாள் பங்கா மறையீ றறியா மறையோனே தேனே அமுதே சிந்தைக் கரியாய் சிறியேன் பிழை பொறுக்குங் கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவமா நகர்குறுகப் போனா ரடியார் யானும் பொய்யும்புறமே போந்தோமே. 5
புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய்யன்பு பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன்யான் அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்றொன் றறியாதார் சிறவே செய்து வழிவந்து சிவனே நின்தாள் சேர்ந்தாரே. 6
தாராய் உடையாய் அடியேற் குன்தா ளிணையன்பு பேரா உலகம் புக்கா ரடியார் புறமே போந்தேன்யான் ஊரா மிலைக்கக் குருட்டா மிலைத்திங் குன்தா ளிணையன்புக் காரா யடியேன் அயலே மயல்கொண் டழுகேனே. 7
அழுகேன் நின்பால் அன்பாம் மனமாய் அழல்சேர்ந்த மெழுகே அன்னார் மின்னார் பொன்னார் கழல்கண்டு தொழுதே உன்னைத் தொடர்ந்தா ரோடுந் தொடராதே பழுதே பிறந்தேன் என்கொண் டுன்னைப் பணிகேனே. 8
பணிவார் பிணிதீர்த் தருளிப் பழைய அடியார்க்குன் அணியார் பாதங் கொடுத்தி அதுவும் அரிதென்றால் திணியார் மூங்கி லனையேன் வினையைப் பொடியாக்கித் தணியார் பாதம் வந்தொல்லை தாராய் பொய்தீர் மெய்யானே. 9
யானேபொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும்பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே. 10
No comments:
Post a Comment