Friday, July 10, 2020

திருச்சதகம் - 5, 5. கைம்மாறு கொடுத்தல்

5. திருச்சதகம்

  (திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது)

திருச்சிற்றம்பலம்

 5. கைம்மாறு கொடுத்தல்

கலிவிருத்தம்

இருகை யானையை ஒத்திருந் தென்னுளக்
கருவை யான்கண்டி லேன்கண்ட தெவ்வமே
வருக வென்று பணித்தனை வானுளோர்க்
கொருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே.  1 
உண்டொர் ஒண்பொரு ளென்றுணர் வார்க்கெலாம்
பெண்டிர் ஆண்அலி யென்றறி யொண்கிலை
தொண்ட னேற்குள்ளவாவந்து தோன்றினாய்
கண்டுங் கண்டிலேன் என்னகண் மாயமே.  2 
மேலை வானவ ரும்அறி யாததோர்
கோல மேயெனை ஆட்கொண்ட கூத்தனே
ஞால மேவிசும் பேஇவை வந்துபோம்
கால மேஉனை யென்றுகொல் காண்பதே.  3 
காண லாம்பர மேகட் கிறந்ததோர்
வாணி லாப்பொருளே இங்கொர் பார்ப்பெனப்
பாண னேன்படிற் றாக்கையை விட்டுனைப்
பூணு மாறறி யேன்புலன் போற்றியே.  4 
போற்றி யென்றும் புரண்டும் புகழ்ந்தும்நின்
றாற்றன் மிக்கஅன் பாலழைக் கின்றிலேன்
ஏற்று வந்தெதிர் தாமரைத் தாளுறுங்
கூற்றம் அன்னதொர் கொள்கையென் கொள்கையே.  5 
கொள்ளுங் கொல்லெனை அன்பரிற் கூய்ப்பணி
கள்ளும் வண்டும்அறாமலர்க் கொன்றையான்
நள்ளுங் கீழுளும் மேலுளும் யாவுளும்
எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே.  6 
எந்தையாய் எம்பிரான் மற்றும் யாவர்க்கும்
தந்தை தாய்தம்பிரான் தனக்கஃதிலான்
முந்தி என்னுள் புகுந்தனன் யாவருஞ்
சிந்தை யாலும் அறிவருஞ் செல்வனே.  7 
செல்வம் நல்குர வின்றிவிண் ணோர்புழுப்
புல்வ ரம்பின்றி யார்க்கும் அரும்பொருள்
எல்லை யில்கழல் கண்டும் பிரிந்தனன்
கல்வ கைமனத் தேன்பட்ட கட்டமே.      8 
கட்ட றுத்தெனை யாண்டுகண் ணாரநீ
றிட்ட அன்பரொ டியாவருங் காணவே
பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டி னோடிரண் டும்அறி யேனையே.  9 
அறிவ னேஅமு தேஅடி நாயினேன்
அறிவ னாகக்கொண் டோஎனை ஆண்டது
அறிவி லாமையன் றேகண்ட தாண்டநாள்
அறிவ னோஅல்ல னோஅரு ளீசனே.  10 

No comments:

Post a Comment

51. அச்சோப் பதிகம்

  51. அச்சோப் பதிகம் கோயில் (சிதம்பரம், தில்லையில் அருளிச்செய்யப்பட்டது)  அனுபவவழி அறியாமை; கலிவிருத்தம். திருச்சிற்றம்பலம் முத்திநெறி அறியா...