Tuesday, July 28, 2020

26. அதிசயப்பத்து

26. அதிசயப்பத்து

 திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயில்) அருளிச்செய்யப்பட்டது.
முத்தி இலக்கணம்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

திருச்சிற்றம்பலம்


வைப்பு மாடென்றும் மாணிக்கத் தொளியென்றும் மனத்திடை உருகாதே செப்பு நேர்முலை மடவரலியர்தங்கள் திறத்திடை நைவேனை ஒப்பிலாதான உவமனி லிறந்தன ஒண்மலர்த் திருப்பாதத்து அப்பன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.  1
நீதியாவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பவ ரொடுங்கூடேன்
ஏதமே பிறந்திறந்துழல்வேன்றனை என்னடி யானென்று
பாதி மாதொடுங் கூடிய பரம்பரன் நிரந்தர மாய் நின்ற
ஆதிஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.  2 
முன்னை என்னுடை வல்வினை போயிட முக்கண துடையெந்தை
தன்னை யாவரும் அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்குப்
பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில் இளமதியதுவைத்த
அன்னை ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.  3 
பித்த னென்றெனை உலகவர் பகர்வ தோர் காரணம்இதுகேளீர் 
ஒத்துச் சென்றுதன் திருவருட் கூடிடும் உபாயம தறியாமே
செத்துப் போய்அருநரகிடை வீழ்வதற்  கொருப்படு கின்றேனை 
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.  4 
பரவு வாரவர் பாடுசென் றணைகிலேன் பன்மலர் பறித்தேத்தேன்
குரவு வார் குழலார் திறத்தே நின்று குடிகெடு கின்றேனை
இரவு நின்றெரி யாடிய எம்மிறை  எரிசடை மிளிர்கின்ற
அரவன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.  5 
எண்ணிலேன் திருநாமவஞ் செழுத்தும்என் ஏழைமை யதனாலே
நண்ணிலேன் கலைஞானிகள் தம்மொடு நல்வினை நயவாதே
மண்ணிலே பிறந்திறந்து மண்ணாவதற் கொருப்படு கின்றேனை
அண்ணல் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.  6 
பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை
இத்தை மெய்யெனக் கருதிநின்று இடர்க்கடற் சுழித்தலைப் படுவேனை
முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.  7 
நீக்கி முன்னென்னைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து
நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து நுகமின்றி விளாக்கைத்துத்
தூக்கி முன்செய்த பொய்யறத் துகளறுத் தெழுதரு சுடர்ச்சோதி
ஆக்கி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.  8 
உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம் போல்
பற்றலாவ தோர் நிலையிலாப் பரம்பொருள் அப்பொருள் பாராதே
பெற்றவா பெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர்சொல் தெளியாமே
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.  9 
இருள்திணிந்தெழுந்திட்டதோர் வல்வினைச் சிறுகுடி லிதுவித்தைப் 
பொருளெனக்களித் தருநரகத்திடை விழப்புகுகின்றேனைத்
தெருளும் மும்மதில் நொடிவரை யிடிதரச் சினப்பதத் தொடுசெந்தீ
அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயங் கண்டாமே.  10 
  

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

51. அச்சோப் பதிகம்

  51. அச்சோப் பதிகம் கோயில் (சிதம்பரம், தில்லையில் அருளிச்செய்யப்பட்டது)  அனுபவவழி அறியாமை; கலிவிருத்தம். திருச்சிற்றம்பலம் முத்திநெறி அறியா...